திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெற்றுவரும் முப்பெரும் விழாவில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் பேசுகையில்,
ஒரு மாநாட்டுக்குரிய கம்பீரத்தோடு இந்த முப்பெரும் விழாவை நடத்திக் கொண்டிருக்கின்ற நண்பர் வேலுவை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த செயலை அவரிடத்தில் கொடுத்தாலும் சிறப்பாக செய்கின்ற ஆற்றல், இதை முடித்து விட்டு வா என்று சொன்னால் முடித்துவிட்டுதான் வந்துதான் சொல்வாரே தவிர முடியாது என்று சொல்கின்ற பழக்கமுடையவர் அல்ல, எனவே செயற்கரிய செய்கின்ற ஒரு சிறந்த மாவட்ட செயலாளர் வேலு என்பதை நான் பாராட்டுகிறேன்.
இந்த முப்பெரும் விழா கழகத்திற்கு பாடுபட்டவர்களுக்கு மட்டுமல்ல வருங்காலத்தில் பாடுபடபோகின்றவர்களுக்கும்தான். ஊக்கமளிக்கும் வகையில் ஸ்டாலின் இந்த விழாவிற்கு ஒரு புதிய உத்வேகத்தை கூட்டியிருக்கிறார். ஒரு இயக்கத்தில் உழைத்தவர்களை மதிக்காவிட்டால் பின்பு உழைப்பதற்கு எவனும் கட்சிக்கு வரமாட்டான். இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சி, திராவிட இயக்கம் இந்த இரண்டும்தான். இந்தியாவிலேயே நூறாண்டு காலம் இருக்கின்ற கட்சி இந்த இரண்டில் இன்றைக்கும் கம்பீரமாக நடைபோடுகின்ற கட்சி திமுக. அதற்கு என்ன காரணம் என்றால் யார் இந்த இயக்கத்திற்கு உழைத்தாரோ அவர்களையெல்லாம் மதிக்கின்ற கட்சி என்பதே. வருங்காலத்தைப் பற்றி சிந்திக்க விட்டால் எதிர்காலத்திற்கு வழி தெரியாது என பேசினார்.
மேலும், அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை இந்த மாநாட்டிற்கு உள்ளது என குறிப்பிட்ட துரைமுருகன் மிரட்டிப் பார்க்கிறார்களா? இது சிறுத்தைகள் கூட்டம் என ஆவேசமாக பேசிய அவர் இந்துத்துவாவை எதிர்த்து நிற்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.