பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ''ஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும்'' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி பணியாற்றிய மக்களுக்கு பல மாதங்களாகியும் ஊதியம் கிடைக்கவில்லை என்று கூறி போராட்டங்கள் வெடித்துள்ளன. உழைத்தவனின் வியர்வை அடங்குவதற்குள் வழங்கப்பட வேண்டிய ஊதியம் மாதக்கணக்கில் வழங்கப்படாமல் இருப்பது நியாயமல்ல.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து மீட்க வேண்டும் என்பது தான். அதற்காகத் தான் இத்திட்டத்தின்படி பணியாற்றிய மக்களுக்கான ஊதியம் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் – திசம்பர் மாதங்களுக்கு மேல் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதற்குக் காரணம் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை என்பது தான்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பிறகு கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வேலை உறுதித் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 2018-19 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.61,084 கோடியை விட மிகவும் குறைவு ஆகும். கடந்த ஆண்டே இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என்று அப்போதே குறிப்பிட்டு இருந்தேன். அதன்பின் இத்திட்டத்தில் சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அதை வரவேற்ற பாட்டாளி மக்கள் கட்சி, அவற்றை செயல்படுத்துவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தி இருந்தது.
ஆனால், மத்திய அரசு எந்த கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யாத நிலையில், இப்போது கடுமையான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை ரூ.55,311 கோடியை விடுவித்துள்ளது. அதில் நேற்று மாலை வரை ரூ.47,542 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை ரூ.4450.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநில அரசின் பங்கு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கிடைத்த நிதியையும் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.4725.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.4684.23 கோடி செலவிடப்பட்டு விட்டது. இதுதான் பயனாளிகளுக்கு குறித்த காலத்திற்குள் ஊதியம் வழங்கப்படாதமைக்கு காரணம் ஆகும்..
அதேநேரத்தில் தமிழகம் பெருமிதப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக தமிழகத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட நடப்பாண்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தான். கடந்த ஆண்டில் வேலை உறுதித் திட்டத்திற்காக திசம்பர் இறுதி வரை ரூ.4138.14 கோடி மட்டுமே அளிக்கப் பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் திசம்பர் 14-ம் தேதி வரை, கடந்த ஆண்டில் வழங்கப் பட்டதை விட சுமார் ரூ.600 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு திசம்பர் இறுதி வரை ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 33.34 நாட்கள் பணி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இதுவரை மட்டும் 37.38 நாட்கள் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு திசம்பர் வரை 10,724 குடும்பங்களுக்கு மட்டுமே 100 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டில் இன்று வரை 44,743 குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சாதகமானவை தான் என்றாலும் கூட, இதுவரை பணியாற்றிய பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கப்படாதது தான் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்காக தமிழகத்துக்கு ரூ.4951 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் அதைவிட ரூ.1,000கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்தால் இத்திட்டம் குறித்த மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிட முடியும். நடப்பாண்டில் இதுவரை ரூ.4450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீட்டையும் சேர்த்து தமிழகத்திற்கு இன்னும் ரூ.1500 கோடி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.