திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று காலை பழனிக்கு வந்தார். அவரை பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமாரின் மனைவி மெர்சி செந்தில்குமார் வரவேற்றுப் பழனி முருகனைத் தரிசிப்பதற்காக ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.
தினமும் முருகப் பெருமானுக்கு ஆறுகால பூஜை நடைபெறுவது வழக்கம். அதில் உச்சிக்கால பூஜையில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்து முருகப் பெருமானைத் தரிசித்துச் சென்றார். ஆனால் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் முருகனைத் தரிசிக்கப் பழனி வருகிறார் என்ற விஷயம் கட்சிக்காரர்கள் சிலருக்குத் தெரிந்தும் வரவேற்க வந்தனர். ஆனால் யாரையும் அனுமதிக்கவில்லை. எளிமையாகவே பக்தர்களோடு பக்தராகச் சென்று முருகப் பெருமானை துர்கா ஸ்டாலின் தரிசித்து விட்டுச் சென்றார்.