18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 291 தொகுதிகள் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 226 இடங்களிலும், மற்றவை 26 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி திமுக 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும், முன்னிலை வகித்து வருகிறது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை.வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த நிலையில், திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு மதிமுக வேட்பாளர் துரை.வைகோ வருகை தந்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த துரை.வைகோ, “தற்போது வரை முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன். என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை. தேர்தலில் நிற்பது தனிப்பட்ட விருப்பம். ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி பெற்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன். தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.