கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய திமுக சார்பில் 1 கோடி ரூபாய்க்கான நிவாரண நிதியை திமுக பொருளாளர் துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன்,
இந்த துயர் மிகு சூழலில் கட்சி பாகுபாடின்றி மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அரசு செய்யும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக ஒரு கோடி ரூபாய் திமுக சார்பில் வழங்க்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அந்த தொகைக்கான காசோலையை முதல்வரை நேரில் சந்தித்து கொடுத்தேன்.
பாதிக்கப்பட்ட இடத்தில் அரசியல் கூடாது என்ற நோக்கில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். புயல் பாதிக்கப்படாத மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள் திமுக சார்பில் புயல் பாதிப்பு உள்ள மாவட்ட மக்களுக்கு உடை, உணவு, மருந்து என அனைத்து வகை வசதிகளையும் ஏற்படுத்தி தர அறிவுரை வழங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அதேபோல் திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கொடுக்கவும் உள்ளனர் என்றார்.
எதிர்க்கட்சி தரப்பினர்தான் மக்களை போராட்டதிற்கு தூண்டி வருகின்றனர் என சில அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனரே என்ற கேள்விக்கு,
மக்கள் நலம் பெற வேண்டும் என்றுதான் நாங்கள் உதவிசெய்து வருகிறோம். எனவே மக்களை பற்றி பேசதான் எங்களுக்கு நேரம் இருக்குமே தவிர இதுபோன்ற சில்லுண்டி தனமான பேச்சுகளுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.
மேலும் போன புயலுக்கே மத்திய அரசின் நிவாரணம் முழுமையாக கிடைக்காத நிலையில் இந்த முறை டெல்லி சென்று எடப்பாடி பழனிச்சாமி மோடியை சந்தித்து நிதியை பெற்றுவிடுவாரா என்ற கேள்விக்கு,
கேட்கிற விதத்தில் கேட்டால் மத்திய அரசிடமிருந்து நிதி வரும். கேட்கும் பொழுது அதிகாரம் இருக்கவேண்டும், தைரியம் இருக்க வேண்டும், கொடுக்குறாயா? இல்லையா? என கேட்க வேண்டும்.நெளிவு சுழிவு காட்டினால் மத்திய அரசாங்கம் பணியாது. அந்த வீரம் இருக்கிறதா முதலமைச்சருக்கு என்று நாளை பார்ப்போம் என்றார்.