Skip to main content

"வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள்" - மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

 

அதிவேகமாக உயர்ந்து கொண்டிருக்கும்  வெங்காய விலையைக் கட்டுப்படுத்துமாறு திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி மக்களவையில் மத்திய அரசை  வலியுறுத்தியுள்ளார்.

 

Kanimozhi

 

“வெங்காய விலை நாளுக்கு நாள் உயரும் நிலையில்,  வெங்காயத்தின் அவசியத்தை உணர்ந்து விலையைக் கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்.  இதுகுறித்து திமுக உறுப்பினர்கள்  நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்” என்று திமுக தலைவர்  ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து,  நவம்பர் 28 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் ஒத்தி வைப்புத் தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுத்திருந்தார் எம்.பி கனிமொழி. இதுகுறித்து அவர் பேசியபோது, "வெங்காய விலை  மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.  மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது நான்கு மடங்கு  அதிகமாகியிருக்கிறது. இதனால் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் குடும்பங்கள் கடுமையான சிக்கலை சந்திக்கின்றன. அவர்களால் உணவுத் தேவையின் முக்கிய அங்கமான வெங்காயத்தை வாங்க முடியவில்லை. தமிழ்நாடு, டெல்லி, மும்பை  என நாட்டின் பல பகுதிகளில் வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கு மேல் போய்க் கொண்டிருக்கிறது.

 


சட்ட விரோதமாக வெங்காயம் பதுக்கப்படுவதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும்  இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக  வர்த்தக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மேலும், தேசிய விவசாயக் கூட்டுறவு வாணிபக் கழகம் வெங்காயத்தை கிடங்குகளில் பாதுகாப்பதில் பாரம்பரியமான முறையையே பின்பற்றுவதால் சேமிக்கப்பட்ட வெங்காயத்தின் பெரும்பகுதி  வீணாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட பின்னரும் கூட வெங்காயத்தின் விலை குறைந்தபாடில்லை.


 


இன்று நாட்டில் பற்றி எரியக் கூடிய பிரச்சினையாக வெங்காய விலை உயர்வு இருக்கும்போது மத்திய அரசு, வெங்காய விலையைக் கட்டுப்படுத்த என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். இதற்காக குறுகிய கால  விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். மத்திய அரசு சார்பில் இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.
 

 

சார்ந்த செய்திகள்