Skip to main content

எய்ட்ஸ் பரப்பும் அரசு மருத்துவமனைகள்! -சாத்தூரில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

‘நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்பவராக இருந்தாலும், எச்.ஐ.வி. தொற்று குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 80 சதவீத எய்ட்ஸுக்குக் காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவு என்பதும் எச்.ஐ.வி. உள்ள ரத்தம் மூலமாக எளிதில் பரவும் என்பதும், எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரத்தின் வாயிலாகப் பலரும் அறிந்திருக்கின்றனர்.  இதில் கொடுமை என்னவென்றால், எய்ட்ஸுக்காக பல்லாயிரம் கோடிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருபுறம் செலவழிக்கின்ற நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளே சத்தமில்லாமல் எய்ட்ஸ் பரப்பும் பணியைச் செய்துவருவதுதான். இதில் மிகைப்படுத்துதல் எதுவும் இல்லை. இதுபோன்ற  தவறுகளுக்கு  எடுத்துக்காட்டாக,  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகள் உள்ளன. 

 

 The cruelty of pregnancy in Sathur

 

சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், அடிக்கடி  சிவகாசி அரசு மருத்துவமனை சென்று, ரத்ததானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெளிநாடு செல்வதற்காக, இவர் மதுரையில் தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது,  தனக்கு  எச்.ஐ.வி. பாசிடிவ்  இருப்பதை அறிந்து அதிர்ந்துபோனார். உடனே, சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று, தன் ரத்த விபரத்தைக் கூறினார். 

 


சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கப்பாண்டியின் மனைவி பரமேஸ்வரி இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்தார். எட்டு மாத கர்ப்பினியான இவரைப் பரிசோதனை செய்த சாத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள், ரத்தக்குறைவு இருப்பதால் உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றனர்.  உடனே, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து ரத்தம் பெறப்பட்டு, கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி பரமேஸ்வரியின் உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. சில நாட்களிலேயே, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட, உடல்நலம் அவருக்குப் பெரிதும் பாதிக்கப்பட்டது. மீண்டும் இவரைப் பரிசோதித்தபோது, எச்.ஐ.வி. தொற்று இருப்பதை சாத்தூர் அரசு மருத்துவனை டாக்டர்கள் அறிந்தனர். உடனே, இதுகுறித்த தகவலை விருதுநகர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் மனோகரனிடம் தெரிவித்தனர். பிறகு நடந்த விசாரணையில்தான், பரமேஸ்வரியின் உடலில் ஏற்றப்பட்டது, எச்.ஐ.வி. தொற்றுள்ள ரமேஷ் தானமாகக்கொடுத்த ரத்தம் என்பதைத் தெரிந்துகொண்டனர். 

 

sivakasi


 

விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரமேஸ்வரி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனை ஆய்வக நுட்பனர்கள் இருவர் மற்றும் நம்பிக்கை மைய ஆலோசகர் ஒருவர் என, மொத்தம் 3 பேரை பணியிடை நீக்கம் செய்த இணை இயக்குநர் மனோகரன், உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும்,   பரமேஸ்வரியின் கணவர் தங்கப்பாண்டி,   அரசு மருத்துவமனையில் ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை செய்யப்படுவார் என்றும்  தெரிவித்தார். 


பரமேஸ்வரியோ, “நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். நடந்த எல்லாத் தவறுகளும் அரசு மருத்துவ அலுவலர் உட்பட பலருக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை. ரத்த வங்கியிலேயே, எச்.ஐ.வி. பாசிடிவ் ரத்தத்தைச் சேமித்து வைக்கிறார்கள் என்றால், ரத்ததானம் செய்பவர்களின் ரத்தத்தைப் எந்தவிதத்தில் பரிசோதித்திருப்பார்கள்? அரசு மருத்துவமனையின் பொறுப்பற்ற செயலால், என் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.” என்று தலையில் அடித்துக்கொண்டார். 

 

sivakasi

 

பரமேஸ்வரியின் கணவர் தங்கப்பாண்டி “எனக்கு எந்த அரசு வேலையும் வேண்டாம். மூட்டை தூக்கி என் மனைவியைக் காப்பாற்றுவேன். சொந்த ஊரிலேயே என் மனைவி உயர் சிகிச்சை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார் வேதனையோடு. 

 

ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவர் “ரத்ததானத்தின் மூலம் பெறப்படும் ரத்தத்தை மூன்றுவகை பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். உண்மையைச் சொல்வதென்றால், மேலோட்டமான பரிசோதனை முறையே, பல அரசு மருத்துவமனைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பி.சி.ஆர். (Polymerase Chain Reaction) பரிசோதனை எங்கும் நடத்தப்படுவதில்லை.  இந்திய அளவில் ரத்த வங்கியை எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிதான் கையாள்கிறது. ஆனாலும், அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் உட்படுத்தப்படாததால், ரத்தத்தில் எச்.ஐ.வி. பாசிடிவ் இருப்பதை முழுமையாகக் கண்டறியப்படாத நிலையே தொடர்கிறது.” என்றார்.  

 

 AIDS spreading government hospitals!


‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா..  அங்கே  ரெண்டு கொடுமை திங்குதிங்குன்னு ஆடுச்சாம்..’  ன்ற கிராமத்துச் சொலவடையை  பிரதிபலிப்பதாக அல்லவா இருக்கின்றன அரசு மருத்துவமனைகளின் அலட்சிய செயல்பாடுகள்? 

 


 

சார்ந்த செய்திகள்