விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இராமுத்தேவன்பட்டி பட்டாசு ஆலைவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ. மேலும், “திடீரென்று உயிரிழப்பைச் சந்தித்துள்ள இக்குடும்பத்தினரின் வருவாய் ஆதாரத்திற்கு ஏதேனும் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு முன்வைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, இராமுத்தேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 10 பேர் இறந்துவிட்டனர். வெடி விபத்து நடைபெற்ற அன்று, மாவட்ட ஆட்சியரும், சாத்தூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமனும் நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். வருவாய் ஈட்டும் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், மூன்று இலட்ச ரூபாய் நிவாரண உதவியினை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரனும் வழங்கி இருக்கிறார்கள். பட்டாசு ஆலை நிர்வாகத்தின் சார்பில் தலா ஐந்து இலட்ச ரூபாய் இழப்பீட்டு நிவாரணமாக வழங்கி உள்ளார்கள்.
ஒன்றிய அரசின் சார்பில் இரண்டு இலட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். அந்த நிவாரணத் தொகை இன்று வரை வந்து சேரவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என்னிடம் முறையிட்டனர். அதனை விரைவாக வழங்கிட முன்வர வேண்டும் என்று ஒன்றிய அரசைக் வலியுறுத்துகிறேன். மேலும் திடீரென்று உயிரிழப்பைச் சந்தித்துள்ள இக்குடும்பத்தினரின் வருவாய் ஆதாரத்திற்கு ஏதேனும் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு முன்வைக்கிறேன்.
ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசுகளைத் தயாரித்ததன் விளைவாகத்தான் விபத்து நிகழ்ந்தது என்று எழுந்த புகாரின் பெயரில் வருவாய் துறை விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு தயாரிப்புத் தொழிலில் உயிரிழப்புகள் நேராவண்ணம் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசையும், மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.
தவிர, 9 இலட்சத்து 85 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, 30 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் சிறப்பாகச் செயலாற்றி வரும் தமிழக அரசு, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் நடைபெறும் பகுதிகளில் கூடுதல் தொழில் பேட்டைகளை உருவாக்கி பல்வேறு தொழில்களைத் தொடங்கி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.