காவிரி பிரச்சனை இரு மாநிலங்கள் பிரச்சனை என்பதால், இதில் ஒன்றிய அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
காவிரி உரிமை பிரச்சனையில் தமிழர் உரிமை காக்கப்படவேண்டும் என்று கூறி துரை வைகோ தலைமையில் மதிமுகவினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை அனைத்தையும் செய்து விட்டது. காவிரி பிரச்சனை இரு மாநிலங்கள் பிரச்சனை என்பதால் இதில் ஒன்றிய அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒன்றிய பா.ஜ.க அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பா.ஜ.க விலிருந்து அ.தி.மு.க விலகியதால் எங்கள் கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாது. எங்கள் கூட்டணியின் இலக்கு மதவாத பா.ஜ.க வை வீழ்த்த வேண்டும் என்பது தான். அதை நோக்கி தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க சிறுபான்மை மக்களுக்கு எதிராக என்னென்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது சிறுபான்மை மக்களுக்கு நன்றாக தெரியும்” என்றார்.