Skip to main content

விஜயபாஸ்கரை கலாய்த்த துரைமுருகன்; சிரிப்பலையில் சட்டசபை

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

Durai murugan and Vijayabaskar conversion in assembly

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், கேள்வி நேரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “அமைச்சர் கொடுத்த விவர அறிக்கையைப் படித்து பார்த்தேன். அதில் 2023 - 2024 நிதி ஆண்டுக்கு நில எடுப்புப் பணிக்கு 554 கோடி ரூபாயும், கால்வாய்ப் பணிக்கு 111 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதி குறித்து நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டிலோ அல்லது மானியக் கோரிக்கையிலோ விவரங்கள் இல்லை. அதன் காரணமாக இந்த நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ. 700 கோடிக்குள்ளானது என்பதை அமைச்சரிடத்தில் அறிய விரும்புகிறேன். 

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் முதல் அனைத்து முதலமைச்சர்களும், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து கனவு கண்டனர். அனைத்து முதல்வர்களும் நிறைவேற்ற எண்ணிய சிறப்பான திட்டம். ஆனால், இந்தத் திட்டத்தை முதன் முதலாக ரூ. 14 ஆயிரம் கோடி அளவுக்கு எஸ்டிமேட் செய்து, 6,941 கோடி ரூபாயை நிர்வாக ஒப்புதலுக்கான அரசாணையை வழங்கி ரூ 700 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கி, 331 கோடி ரூபாயை இரண்டு தவணையாக டெண்டர் விட்டு, மிக சிறப்பாக 100 பொக்லைன் வாகனங்களை வைத்து விவசாயிகளின் மத்தியிலேயே விவசாயிகளின் வாழ்த்துகளோடு கரகோஷங்களோடு ஒரு எளிய விவசாயி குடும்பத்தில் பிறந்த இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராகவும் அன்றைய முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் திட்டத்தை நிறைவேற்றி தொடங்கி வைத்தார். 

 

நான் அமைச்சரை, வாருங்கள் ஆறு வெட்டப்படுவதை பாருங்கள். தாராளமாக நிதியை தாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன். காரணம் என்னவென்றால் இந்தத் திட்டத்தில் நிலம் எடுக்கும் பணிகளும், கால்வாய் வெட்டும் பணிகளும் மந்தமாக நடந்து வருகிறது. அதன் காரணமாக நீங்கள் நேரடியாக ஆய்வு செய்து சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். நெல்லும், வாழையும், கரும்பும் பார்க்கின்றபோது எங்களை போன்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கும் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்தை சார்ந்தவர்களுக்கும் ‘இதுபோல் நம் மாவட்டத்தில் எப்போது விளையும்’ என ஏக்கமாக இருக்கும். நீண்ட காலம் நீர்வளத்துறையை நிர்வகித்தவர், அவருக்கு நீரின் வாசனையும் மண்ணின் வாசனையும் விவசாயிகளின் கஷ்டத்தின் வாசனையும் தெரியும். எப்படி திட்டத்தை துவங்கி வைத்து வரலாற்றில் இடம்பெற்றாரோ எடப்பாடி, அதுபோல் நிதி வழங்கி நீங்களும் வரலாற்றில் இடம் பெறவேண்டும்” என்றார். 

 

அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, “போதுமே..” என்றார். அதற்கு விஜயபாஸ்கர், “ஒரு நிமிடம்” என்று சொல்லிவிட்டு மீண்டும், “எம்.ஜி.ஆர். அழகாக பாடியிருக்கிறார். ‘நதியைப் போல் நாமும் நடந்து பயன் தரவேண்டும். கடலை போல விரிந்து பரந்த இதயம் வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அந்த விரிந்த இதயத்தோடு நீங்கள் நிதியை தாருங்கள். நில வளம் இருக்கிறது; நீர்வளம் இருக்கிறது; அரசின் மனவளம் இன்னும் சிறப்பாக ஒத்துழைத்தால் எங்கள் மண் வளம் சிறக்கும் என ஏழு மாவட்ட விவசாயிகளின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். எனவே மூத்த அமைச்சர் நீர்வளத்துறை அமைச்சர் இந்த வரலாற்றில் நீங்கள் இடம்பெற்று விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும். வாடிய பயிரை காணுகின்ற போதெல்லாம் வாடிய வள்ளலார் போல்.. நீங்கள் நிதியை தந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார். 

 

இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயபாஸ்கரின் வேகமான பேச்சைக் கேட்டேன். அவர் அமைச்சராக இருக்கும்போது இதுபோன்ற கேள்விகள் எல்லாம் வரும். ஆனா, ரொம்ப கெட்டிக்காரத்தனமா பேசுவார். என்னமோ இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் தான் கொண்டு வந்தது போலவும், வேறு யாரும் அது குறித்து சிந்திக்காததைப் போலவும்.. அட அட அட அட” என்றார். அப்போது எதிர்க்கட்சி தரப்பிலிருந்து நாங்களும் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தோம் என்றனர். 

 

அதற்கு அமைச்சர் துரைமுருகன், “நீங்க செய்யவில்லை என்று நான் சொல்லவில்லை. நீங்கள் மட்டுமே செய்தது போல் சொல்கிறாரே அதற்கு தான் சொல்கிறேன். உண்மையில் இந்தத் திட்டம் என்பது, தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் மகாநதியையும் குண்டாறுவையும் இணைக்கத் திட்டம் போட்டனர். அது மிகவும் கடினம் என்று எண்ணி பிறகு மகாநதியையும் கோதாவரியையும் இணைப்பது பிறகு கோதாவரியிலிருந்து குண்டாறுவை இணைப்பது என்று முடிவெடுத்தனர். இந்தத் திட்டம் வரும்போது தலைவர் கலைஞர், ‘இது ஒரு நல்லத் திட்டம் அது வரும்போது வரட்டும். ஆனால், காவிரி - குண்டாறு இணைப்பதை நாம் செய்வோம்’ என முதல்முதலாக நினைத்து அதற்காக மாயனூரில் ரூ. 165 கோடி ஒதுக்கி கதவணையை கட்டி, அங்கிருந்து குண்டாறுக்கு தண்ணியை எடுத்துச் செல்ல வழி செய்தவர் கலைஞர். கட்டியவன் அடியேன் துரைமுருகன்” என்றார்.

 

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமணியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டமும் இதனுடன் சேர்த்துதான் அறிவித்தது” என்றார்.

 

அதற்கு அமைச்சர் துரைமுருகன், “நம்ம சபாநாயகருக்கு எதுவாக இருந்தாலும், அவாள் ஊரையும் சொல்வார்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து பேசினார். “இதற்கு 9.5.2008- ல் கலைஞர் ஆணையிட்டார். 9.2.2009-ல் வேலையைத் துவக்கினோம். அதன்பிறகு நீங்கள் வந்தீர்கள், அப்போது ரூ 254 கோடியாக உயர்ந்தது. அதை கட்டி முடித்துவிட்டோம். நீங்களும் சரி, நாங்களும் சரி எதுவாக இருந்தாலும், காவிரி குண்டாறு இணைப்பதுதான் சரியாக இருக்குமென்று இதனை செய்தோம்” என்று மேலும் அந்தத் திட்டம் குறித்து விவரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்