
மின்னல் தாக்கியதில் பாறைகள் உடைக்க வைத்திருந்த வெடிகள் வெடித்து சிறுவன் பலியானதோடு 6க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் முக்கனாமலைப்பட்டி கிராமத்தில் இலுப்பூர் சீத்தாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி மகன் சபாபதிக்கு (48) சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு ஏராளமானோர் வேலை செய்கின்றனர்.
வியாழக்கிழமை (01.07.2021) மாலை இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியதால் தொழிலாளர்கள் குவாரியில் உள்ள ஒரு கொட்டகையில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்திருந்த பாறை உடைக்கும் வெடிகள் அடுத்தடுத்து வெடிக்க, கொட்டகையில் நின்ற வீரப்பட்டி தெற்குகளம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன் அதே இடத்தில் உயிரிழந்தார். தொடர்ந்து அருகில் இருந்த வெடிமருந்து பெட்டிகளும் வெடித்தது.
மழைக்காக ஒதுங்கி நின்ற தொழிலாளர்கள் திசைக்கு ஒருவராக ஓடினாலும் அடுத்தடுத்து வெடித்ததால் குடுமியாண்மலை சேரனுர் அண்ணாநகர் கருப்பையா (45), ஆண்டிச்சாமி (51), செல்வராஜ் (50), சுரேஷ், காந்தி, குளவன்பட்டி மணிகண்டன் ஆகிய 6 பேரும் பலத்தக் காயங்களுடன் விழுந்து கிடந்தனர். இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.