திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்திரை பௌர்ணமி பெருவிழா தொடங்கியுள்ளது. சுமார் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என முடிவு செய்த மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்தது. இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்து ஆய்வு செய்துவிட்டு சில உத்தரவுகளை வழங்கிவிட்டு சென்றார். கோடை காலம் என்பதால் பக்தர்கள் வெய்யிலில் வாடி வதங்கிவிடக்கூடாது என்பதற்காக பக்தர்கள் நிற்கும் வரிசையில் நிழற்கூரை அமைக்கப்பட்டது, அதோடு குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு செய்த மாவட்ட நிர்வாகம் நகரப்பகுதியில் கழிப்பறை வசதியை செய்யவில்லை.
கோவிலைச்சுற்றி கோவில் மதில்சுவரை ஒட்டினார்ப்போல் வடக்கு பிரகாரம், தெற்கு பிரகாரம் என இரண்டு இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த பாதைகள் விவிஐபி பக்தர்கள் வருகை தரும் பாதைகள் என சாதாரண பக்தர்கள் செல்லாத வகையில் காவல்துறை அடைத்துவிட்டது. தேரடி வீதியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு வைத்திருந்த தற்காலிக கழிப்பறை தண்ணீர் இல்லாமல் நாற்றமடிக்கத் துவங்கி விட்டன. இதனால் சென்னை, வேலூர் சாலை வழியாக வந்த பக்தர்கள் சிறுநீர் கழிக்க, காலைக்கடன்களை முடிக்க முடியாமல் தவித்துப்போயினர்.
அருகில் உள்ள ஹோட்டல்களில் அவர்கள் கெஞ்சி அங்கிருந்த கழிவறைகளை பயன்படுத்தியுள்ளனர். மாடவீதியில் உள்ள சில சத்திரங்களில் சிலர் பாத்ரூம் போகனும் எனக்கேட்டபோது, இது எங்க சாதிக்காரர்களுக்கானது, உங்க சாதி மடம் இருக்கும் அங்கப்போங்க எனச்சொல்லி அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடியற்காலை முதல் கழிவறைகூட செல்ல முடியாமல் தவித்தது அங்கிருந்த வியாபாரிகளை வேதனைப்படவைத்தது.
சிலர் வடக்கு மாடவீதியில் கட்டண கழிப்பறைகள் நிறைய இருக்கு அங்கப்போங்க என சிலர் வழிகாட்டி உள்ளனர். பலரும் அங்கே அவசரமாக ஓடியுள்ளனர், அந்த ரோடு முள்கம்பி தடுப்புகள் மூலமாக யாரும் போகாதபடி தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் இந்த ரோடு வழியாக போகமுடியாது எனச்சொல்லி விரட்டியுள்ளனர். பாத்ரூம் போகனும் அதுக்குதான் எனக்கேட்க, வேற எங்காவது போ இந்தப்பக்கம் போக முடியாது என விரட்டியடித்து தங்களது கடமையை செய்துள்ளனர்.
நகரப்பகுதியில் மட்டுமல்ல கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறைகள் பலவற்றில் தண்ணீரே இல்லை என்பதால் அதனை பக்தர்களால் பயன்படுத்த முடியாமல் புதர்கள் பக்கம் ஒதுங்கினர். கோடி கோடியாய் வருமானம் தரும் அண்ணாமலையார் பக்தர்களுக்கு வசதிகள் செய்துதர மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை, காவல்துறை ஏனோ சரியான முறையான வசதிகள் செய்துதருவதில்லை என குற்றம்சாட்டுகிறார்கள் பக்தர்கள்.
படங்கள் – எம்.ஆர்.விவேகானந்தன்