கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் அதே பகுதியில் லேப்டாப் சேல்ஸ் அண்டு சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவை சிவானந்தா காலனியில் மது போதையில் தனது சுவிப்ட் காரில் வேகமாக வந்து, ஆனந்தா பேக்கரி எதிரே இருந்த கட்சி கொடி கம்பங்கள் மீது காரை மோதிவிட்டு வேகமாக சென்றுவிட்டார். அதுமட்டும் இல்லாமல் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியுள்ளார்.
இதையடுத்து சிவானந்தா காலனி வழியாக வந்த ஸ்டீபன் ராஜாவின் காரை மடக்கிப் பிடிக்க பொதுமக்கள் ரத்தினபுரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காரை மடக்கிப் பிடித்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்டீபன் ராஜ், அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஸ்டீபன் ராஜை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால், அவர்களுடனும் ஸ்டீபன் ராஜ் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபடார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறி, காரில் இருந்த லேப்டாப்பை எடுத்து கீழே போட்டு உடைத்துவிட்டு, கழுத்தில் இருந்த செயினையும் அறுத்து ரோட்டில் வீசி போலீஸாரிடம் ரகளையில் ஈடுபட்டார்.
இறுதியில், ஒரு வழியாக அவரை அடக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தற்போது ஸ்டீபன் ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.