தர்மபுரி அருகே, போதை ஊசி மருந்து விற்பனை செய்து வந்த இருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே உள்ள மிட்டதின்ன அள்ளியைச் சேர்ந்தவர் வஜ்ரவேல் (வயது 42). கடந்த சில நாள்களுக்கு முன்பு, உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சாமிசெட்டிப்பட்டி அருகே உள்ள கமல்நத்தம் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (வயது 46) என்பவரிடம் சென்று, தனக்கு உடல்வலி இருப்பதாகவும், மருந்து தருமாறும் கேட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு ஊசி போட்டதும் வலி குறைந்துள்ளது. இதுகுறித்து வஜ்ரவேல் தனது ஊரில் உள்ளவர்களுக்கும், பக்கத்து கிராம மக்களுக்கும் தெரிவித்துள்ளார். மேலும், வஜ்ரவேலிடம் இருந்து அந்த ஊசியை முருகேஷ் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் சந்திராமேரி, முருகேசனின் வீட்டில் சோதனை செய்தார். அந்த வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட போதை ஊசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர், சட்ட விரோதமாக பொதுமக்களுக்கும் அந்த ஊசி மருந்தைச் செலுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில், முருகேசன், வஜ்ரவேல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சட்ட விரோதச் செயலில் ஈடுபட்டதோடு, பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை எஸ்.பி. கலைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், இருவரையும் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.