புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி வருகின்றனர். இதுபோல உப்பளம் நடத்த அனுமதிபெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில், லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.
இது சம்பந்தமாக 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை புதன்கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்ச ராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாத அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர்.
பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்டவிரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.