பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தை சுற்றிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும் விடுதிகளில் தீவிர சோதனையானது நடைபெற்றது. இதனால் தாம்பரம் செங்கல்பட்டு சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பெருமளவு கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் விடுதிகளில் இன்று சோதனையானது நடைபெற்றது.
பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். அங்கு பயிலும் மாணவர்கள் பொத்தேரி பகுதியிலேயே தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியாக அறை எடுத்து தங்கி வருகின்றனர். இந்நிலையில் அங்கு மாணவர்களிடையே கஞ்சா, மெத்தபெட்டமையின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்திருந்தது.
இந்நிலையில் கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆறு மணி முதல் குடியிருப்பு பகுதி மற்றும் வீடுகளில் அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர். இதில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1/2 கிலோ கஞ்சா மற்றும் 6 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் 20 எம்.எல்,பாங் 5, ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக 19 மாணவர்களைப் பிடித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.