காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் இரண்டு தடுப்பணைகள் கட்ட இருப்பதாக கர்நாடக அரசு கூறி வந்தது. குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைகளுக்காக அணை கட்டப்படுகிறது என்று கூறி வந்தது. இந்த நிலையில் தடுப்பணைகளின் வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அனைத்து கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசும் போது…
இது ஆர்ப்பாட்டம் அல்ல. இது போர்ப்பாட்டம். ஆளுகிறவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மிதித்து எரிக்கிறார்கள் தங்களின் செயல்பாடுகளால். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க மோடி, பாஜக தயாராக இல்லை. அதை எதிர்க்க முதுகெலும்பில்லாத பொம்மலாட்ட காட்சி ( ஆட்சி ) தயாராக இல்லை.
அனைத்துகட்சி கூட்டம் கூட ஒருங்கிணைக்க லாயக்கற்ற அரசு. வெறும் 500 கோடிக்கும் குறைவாக வழங்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன எங்களுக்கு பிச்சை இடுவது. எங்களின் வரிப்பணம். ''மனதின் குரல்'' நிகழ்ச்சியில் கூட ஒரு வார்த்தை இரக்கம் காட்டவில்லை. தமிழ்நாட்டுக்கும் உனக்கும் என்ன சம்மந்தம். நீங்கள் இந்தியாவின் பிரதமரா? கர்நாடகாவின் முதல்வரா? என முழக்கம் எழுப்பபட்டது.
கர்நாடகவில் முதல்வராக வர ஆசையில் தான் இந்த தூண்டில் வீசப்பட்டுள்ளது. காவிரியை தடுத்தால் மோடியை வர விடாமல் தடுப்போம் என கூறினோம். விமானத்தில் கூட இனி தமிழகத்துக்கு வர விட மாட்டோம் என்பது பிரதமராக வர விடமாட்டோம் என பொருள். வடநாட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது தீ போன்ற எத்தனை உரிமைப்போராட்டங்கள். தனித்தனி களம் வேண்டாம்.
திமுக ஆட்சியில் அமர அனைத்து கட்சிகளும் ஒரே தீர்வாக ஒருங்கிணைய வேண்டும். உதயசூரியன் யாரை அடையாளம் காட்டுகிறதோ அங்கே முத்திரையிடுங்கள். மோடிகள் வர முடியாது. தொடர்ந்து போராட்டம் நடத்துவதில் அர்த்தம் இல்லை. அண்ணா கூறிய படி பிரிவினை மறந்தோம். பிரிவினைக்கான காரணங்கள் தொடர்கிறது. டெல்லி குத்திக் காட்டுகிறது. நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. நீங்கள் பிரித்து விடுகிறீர்கள். எங்களை தொடர்ந்து வஞ்சிக்கிறீர்கள். தமிழ்நாடு தனிநாடாவதைத் தவிர்க்க முடியாது. இதற்காக திராவிடர் கழகம் சிறை செல்லத் தயார். நீங்கள் தடுக்கப் போகிறீர்களா. நீங்கள் விரும்புகிறீர்களா. நீங்களே முடிவு செய்யுங்கள். என்றார்.