Skip to main content

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்