மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், 'மின்சாரம், குடிநீரின்றி மழை நீர் புகுந்ததால் வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. புயல், மழை வெள்ள பாதிப்புகளால் பெரும்பாலான குடும்பங்களுக்கு பலத்த நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக வணிகர்களுடைய வியாபாரம் முற்றிலும் முடங்கி விட்டது. கூடுதல் நிதிச் சுமை, வருவாய் இழப்பு என வணிகர்கள் இரட்டை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்கள் மின்சார கட்டணம் செலுத்தும் அவகாசத்தை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.