விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிகல் குளம் பகுதியில் இரண்டாம் கட்டமாக அகழாய்வு நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் அதில் நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் சுடுமண்ணால் செய்யப்பட்ட தக்ளி கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக சங்கு வளையல் செய்யும் தொழில் கூடம் அங்கு இருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்த நிலையில் சமீபத்தில் கிடைத்த தக்ளியின் மூலம் அங்கு நெசவுத் தொழிலும் நடைபெற்றது உறுதியாகி இருந்தது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் இதுவரை கண்ணாடி மணிகள், சுடுமண் காதணிகள், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, சங்கு வளையல், தங்க அணிகலன், தங்கப்பட்டை உள்ளிட்ட ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது கருப்பு நிற சுடுமண் தோசைக் கல் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான இந்த சுடுமண் தோசைக் கல் சேதமடைந்த நிலையில் உள்ளது. தொடர்ந்து உணவு தயாரிக்கும் பொருள்கள் கண்டறியப்பட்டு வருவதால் தொன்மையான மனிதர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்திருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை, இந்த இடத்தில் 2800க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்லியல் ஆய்வுகளைத் தொடர இருப்பதாகத் தொல்லியல் ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.