நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் இரண்டு இளைஞர் காயப்பட்டிருப்பதும், ஒருவர் பலியாகியிருப்பதும் மீனவர்கள் மத்தியில் பெருத்த வேதனையை உண்டாக்கியிருக்கிறது.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது மகன்களான கிருபா, மதி, மதன் மற்றும் அவர்களோடு அதே பகுதியைச் சேர்ந்த கோபு, முருகேசன், இபிதன், சுவாமிநாதன், சுபாஷ், தினேஷ் ஆகியோர் கடலில் மீன்பிடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
அப்போது வேளாங்கண்ணி கடற்கரையோரம் படகை நிறுத்துவதற்காக வந்துகொண்டிருந்தபோது எதர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் படகு கவிழ்ந்துள்ளது. அந்த விபத்தில் மதன், தினேஷ் ஆகிய இருவர் மீதும் படகு கவிழ்ந்தது. அதை அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெரு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் பார்த்துவிட்டு அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தபோது அவர் மீதும் படகு விழுந்ததில் காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் காயமடைந்த மதன், ஸ்டீபன், தினேஷ் மூவரையும் மீட்டு நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், தினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஸ்டீபன், மதன் ஆகிய இருவரும் பலத்தக் காயத்தோடு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து வேளாங்கண்ணி கடலோர காவல்படை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.