சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்ததில் அதிக அளவு ஃபீனால், கிரீஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணூரின் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப்பகுதியில் குறிப்பாக பக்கிங்காம் கால்வாயில் சிபிசிஎல் தொழிற்சாலைக்கு தெற்கு புறத்தில் உள்ள நீர் மாதிரிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து பகுப்பாய்வு செய்தது. அந்த ஆய்விற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெய்யாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளை ஆய்வு செய்த பொழுது ஒரு லிட்டருக்கு 48 கிராம் அளவிற்கு ஃபீனால் இருப்பது தெரியவந்துள்ளது. 10 கிராமில் ஒரு கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும், ஒரு லிட்டரில் 728 மில்லி கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் கலந்திருக்கும் எண்ணெய் கழிவுகள் பல இடங்களில் மீனவர்களை வைத்து அள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மீனவர்களை வைத்து ஆபத்தை ஏற்படுத்தும் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில், 'சிபிசிஎல் நிறுவனத்தின் தவறால் வெளியேறி கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை மீனவ மக்களை வைத்து அள்ளுவது கண்டனத்திற்குரியது. அவ்வாறு செய்யக்கூடாது. உரிய பாதுகாப்பு கருவிகளுடன், முறையான பயிற்சி பெற்றவர்களை பணியில் ஈடுபடுத்தி கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.