நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என இன்று தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி, மாணவரணி,மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் திருவள்ளூரில் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் இப்போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், ''நீட் தேர்வு வேண்டாம் என்று இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் நான் எப்படி இதை பார்க்கிறேன் என்றால் மாணவர்கள் ஏற்கனவே படிக்க ஆரம்பித்து தன்னம்பிக்கையோடு மருத்துவராகவும் சூழ்நிலை உருவாகும் நேரத்தில் ஆளும் கட்சியே அந்த நம்பிக்கையை குலைக்கும் அளவிற்கு இந்த போராட்டங்கள் நடத்துவது சரி இல்லை என்பது என்னுடைய கருத்து. இரண்டு வருடத்திற்கு முன்பு நீட் வேண்டாம் என்று கையெழுத்து போட்டுவிட்டு தான் பதவி ஏற்போம் என்று சொன்னார்கள். இப்பொழுது கையெழுத்து போட்டுவிட்டு உண்ணாவிரதம் இருக்கிறார்களா? கையெழுத்து போடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார்களா?
மாணவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. மாணவர்கள் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. மருத்துவம் சார்ந்த எத்தனையோ படிப்புகள் இருக்கிறது. இந்த படிப்புதான் இருக்கிறது என்பது இல்லை. முயற்சி வெற்றியடையவில்லை என்றால் அடுத்து முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்கள் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு மருத்துவப் படிப்பைப் படிக்க வேண்டும் என நினைத்து விட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்'' என்றார்.