கடந்த 22 ஆம் தேதி மாலை வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகையில், ''இன்றைய தினம் தலைமைச் செயலாளர் தலைமையில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடனான காணொளி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்ட ஒழுங்கு சம்பந்தமான ஆலோசனை நடைபெற்றது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்கள், தனிப்பட்ட முறையில் நடந்த சம்பவங்கள் அதைப் பற்றி ஆய்வு செய்தார்கள். இந்த ஏழு சம்பவங்களிலும் பொதுமக்களின் உயிருக்கோ, உடைமைக்கோ மேஜர் சேதம் ஒன்றும் இல்லை. அதனால் ஊடகங்கள் வாயிலாக என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால் பதற்றப்படவோ அச்சப்படவோ வேண்டிய சூழ்நிலை இல்லை. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல மத நல்லிணக்கத்திற்கான கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோரின் தலைமையில் 92 ஜமாத் தலைவர்கள் கூப்பிட்டு கூட்டம் நடத்தினோம். அவர்களுடைய ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. 3 மணி நேரத்தில் இந்து அமைப்புகளின் தலைவர்களோடு கூட்டம் நடைபெற உள்ளது. எல்லோரும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்பு தருகிறார்கள். ஊர்களில் அல்லது மாநகர் பகுதிகளில் ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்தால், வெளி மாவட்டத்தையோ, வெளி மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் வரும் பட்சத்தில் உடனடியாக காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் கொடுப்பதற்காக தனியாக பொதுமக்கள் அமைப்புகள், கிராம நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சேர்ந்த குழுவை அமைத்திருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் சில தவறான செய்திகள் பதட்டத்தை மக்கள் மனதில் உருவாக்குவதற்காக பரப்பப்படுகிறது. வெடிகுண்டு வீசி எக்ஸ்ப்ளோஷன் நடைபெற்றது என்றெல்லாம் தவறான செய்திகள் வருகின்றன. எக்ஸ்ப்ளோஷன் எதுவும் நடைபெறவில்லை. கண்டிப்பாக இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தனிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.