நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆவுடையப்பனின் மகன் முத்துக்கிருஷ்ணன் (36). நெல்லை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து சென்னை வரை செல்கிற விரைவுப் பேருந்தின் ஒட்டுனராகப் பணியாற்றி வருபவர். அவரின் மனைவி சந்திரா இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்தச் சூழலில் வழக்கமாக விரைவுப் பேருந்தை இயக்கிக் கொண்டிருக்கும் முத்துக்கிருஷ்ணன் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து பாபனாசம் நோக்கி விரைவுப் பேருந்தை ஒட்டி வந்திருக்கிறார். அப்போதைய அதிகாலைப் பொழுது அந்தப் பேருந்து மதுரையை அடுத்த மேலூர் பக்கம் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் மோதி விபத்திற்குள்ளாகியிருக்கிறது.
விபத்தில் விரைவுப் பேருந்தின் முன் பகுதி பெருத்த சேதமடைந்ததால் முத்துக்கிருஷ்ணன் அதன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மரணமடைந்த முத்துக்கிருஷ்ணின் இரண்டு கண்களும் உயிர்த் துடிப்பிலிருப்பதையறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவரது மனைவி சந்திராவைத் தொடர்புகொண்டு முத்துக்கிருஷ்ணனின் இரண்டு கண்களையும் தானமாகக் கேட்டிருக்கிறார்கள். கணவனைப் பறி கொடுத்த சோகத்திற்கிடையே சந்திராவும் அதற்குச் சம்மதிக்க கண்களைத் தானமாகப் பெற்றுக் கொண்டனர்.
ஒரு குடும்பத்தில் யாரேனும் கருவுற்றிருந்தால் அந்தக் குழந்தை பிறக்கும் வரை ஒரு உயிரையோ அல்லது உடல் உறுப்புகளையோ சேதமாக்கமாட்டார்கள் அந்தக் குடும்பத்தினர். தமிழகக் கிராமங்களில் நடைமுறை மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிற இந்த அதீதக் கொள்கையை உடைத்து, அடுத்தவரின் மூலமாகத் தன் கணவனின் கண்கள் ஒளிரட்டும் என்கிற தியாக மனப்பான்மையோடு கணவனைப் பறிகொடுத்த நிலையிலும் தானம் கொடுத்த சந்திரா நிறைமாதக் கர்ப்பிணி. இன்னும் நான்கு தினங்களே பிரசவத்திற்கு உள்ள நிலையில் அடுத்தவர் வாழ்வில் ஒளி விளக்கேற்றி வைத்த அவரின் தானக் கொடை அந்தப் பகுதியினரை நெகிழச் செய்திருக்கிறது.