புதுக்கோட்டையில் பொன்னமராவதி பகுதியில் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த 12 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சொக்கநாதபட்டி பகுதியில் தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடித்ததில் மொத்தமாக காயமடைந்த நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் அந்தப் பகுதியில் மற்ற இடங்களில் தெருநாய் கடித்ததால் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் உள்ளிட்ட பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 12 பேர்களில் எட்டு பேர் சொக்கநாதபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் உள்ளிட்ட நாலு பேர் பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே சென்னையில் சிறுமி ஒருவரை வளர்ப்பு நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்று வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பொன்னமராவதியில் மொத்தமாக 12 பேர் நாய் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.