வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த கல்பனா( 48). அவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்பொழுது கோயில் வளாகத்தில் படுத்திருந்த நாய் ஒன்று திடீரென கல்பனாவை ஓடிவந்து கடித்துள்ளது. இதில் அவர் அலறி கூச்சலிட்டும் விடாமல் கை, கால் உள்ளிட்ட இடங்களில் நாய் கடித்துக் குதறியது. இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நாயை துரத்தி விட்டனர்.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கல்பனாவை அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு கல்பனாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொண்டசமுத்திரம் ஊராட்சி பகுதியில் அதிக அளவிலான தெரு நாய்கள் சுற்றுவதாகவும் இதை கட்டுப்படுத்த ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதுமே தெருநாய்கள் பொதுமக்களை குறிப்பாக சிறார்களை பெண்களையும் கடித்து குதறுவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது அரசு இதில் கவனம் செலுத்தி நாய்களுக்கு தடுப்பூசியும் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.