வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாததால் இயக்குனர் பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றை ஏலத்தில் விற்க வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்டவர் பாலச்சந்தர். தாதா சாகோப் பால்கே விருது பெற்ற இவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்வதவர். தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பாலச்சந்தர், கடந்த 2014ஆம் ஆண்டு உயிர்நீத்தார்.
அதையடுத்து, அவரது தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா செயலற்றுக் கிடந்தது. இந்நிலையில், இயக்குனர் பாலச்சந்தர் யூ.சி.ஓ. வங்கியில் வாங்கியிருந்த ரூ.1.36 கோடியைத் திரும்பச் செலுத்தாததால், மயிலாப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தை ஏலத்தில் விற்க சம்மந்தப்பட்ட வங்கி முடிவு செய்துள்ளது. இந்த வீட்டின் ஒரு பகுதி பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி பெயரிலும், மற்றொரு பகுதி அவரது மனைவி ராஜம் பாலச்சந்தர் பெயரிலும் உள்ளன.
இந்நிலையில், இந்தத் தகவல் குறித்து பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் டிவி, தொடர் நிகழ்ச்சிகளின் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் 2010 ஆம் ஆண்டு குடும்ப உறுப்பினர்களின் வேறு சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வாங்கியது. 2015ஆம் ஆண்டில் திரைப்பட மற்றும் டிவி தொடர்களை நிறுத்திவிட்டு, டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவுசெய்தது. முதலும், வட்டியுமாக சேர்த்து கணிசமான தொகையை செலுத்திவிட்டது. மீதமுள்ள கடன் தொகையைத் திரும்பச் செலுத்த வங்கியுடன் one time settlement பேச்சுவார்த்தையை சட்டரீதியாக நடத்திவருகிறது. இந்நிலையில், வங்கி செய்தியின் அடிப்படையில் ஊடகங்களின் செய்தி உண்மைக்குப் புறம்பானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.