நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி.
அப்போது அவர் கூறியதாவது, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதை கடுமையாக மஜக எதிர்க்கிறது.
மக்கள் விரும்பாத திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என துணை முதல்வர் OPS அவர்கள் கூறியுள்ளார்கள். அதன்படி தமிழக அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கூடாது.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என இரு முறை சட்டமன்றத்தில் பேசியுள்ளேன்.
தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஏற்கனவே இது போன்ற திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இனியும் தன்னெழுச்சியாக போராடுவார்கள். தமிழகத்தின் உணவு தேவைகள் இங்கு தான் தயாராவதால் தமிழக மக்களும் திரள்வார்கள்.
எங்கள் கோரிக்கைகள் நியாயமானவை. எங்கள் மண்ணை மலடாக்காதீர்கள். எங்கள் தண்ணீரில் விஷம் கலக்காதீர்கள். எங்கள் விவசாயத்தை அழிக்காதீர்கள். நாங்கள் சுவாசிக்கும் காற்றில் நஞ்சை கலக்காதீர்கள். மொத்தத்தில் நாங்கள் உண்ணும் சோற்றில் மண்ணை அள்ளிக் கொட்டாதீர்கள் என்கிறோம்.
நாங்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் மக்களின் வாழ்க்கையை அழித்து, வளர்ச்சி திட்டங்கள் என்பதை தான் எதிர்க்கிறோம்.
ஹைட்ரோ கார்பன் மூலம் தயாராகும் மின்சாரத்தின் விலை அதிகம். ஆனால் சூரிய ஒளி மூலம் தயாரிக்கும் மின்சாரத்தின் தயாரிப்பு ஒரு யூனிட் விலை 3 ரூபாய் தான். எனவே இதைத் தான் ஆதரிக்க வேண்டும். பெரு நிறுவனங்கள் கொள்ளையடிக்க, வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க கூடாது என்றார்.