தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் ஊரடங்கின்போதே விதிகளை மீறி நடமாடும் மக்களிடம் காவல்துறை கடுமையாக நடந்துகொண்டதால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக புகார் எழுந்திருந்தது.
இந்நிலையில், இந்த ஊரடங்கில் பொதுமக்களிடம் காவல்துறை அவ்வளவு கடுமை காட்டக் கூடாது என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, சமீபகாலங்களில் விதிகளை மீறி வாகனங்களில் செல்வோரைப் போலீசார் விசாரிக்கும்போது, வாகன ஓட்டிகள் போலீசாருக்கே மிரட்டல்விடும் சம்பவங்கள் தொடர்ந்துவருகிறது. அண்மையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களைக் கடுமையாகவும் ஒருமையிலும் பேசிய வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், “சோதனையின்போது வாகன ஓட்டிகள் கோபமாக பேசினாலும் போலீசார் கோபப்பட வேண்டாம். வீடியோ எடுங்கள். பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். மக்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்” என சென்னை அரும்பாக்கத்தில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.