தமிழக மக்களின் உணர்வு மத்திய அரசுக்கு தெரியவில்லையா? என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
உச்சநீதிமன்றம் பிப்.16ம் தேதி அளித்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள் அமைக்கப்பட வேண்டும், காவிரி நீரை முறைப்படுத்தும் குழுவையும் அமைத்தாக வேண்டும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, நாடாளுமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப்படி எந்த ஒரு அரசும் செய்யாத வகையில் மத்திய அரசுக்கு பல்வேறு விதமாக அழுத்தம் கொடுக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டுள்ளது. அதில் 2 கோரிக்கைகள் தான் வைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹா, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என இரண்டு பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளனர் என்றும் மேலாண்மை வாரியம் அமையும் வரை அவர்கள் மீது அவமதிப்பு தொடரும் வகையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் கால அவகாசம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு ஏற்றுக்கொள்ளக்கூடாது ஒன்று. தீர்ப்பு தெளிவாக இருக்கும் போது, மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் கோருவது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
கர்நாடக மக்களின் உணர்வை பார்க்கும் மத்திய அரசுக்கு, தண்ணீர் இல்லாமல் பசியோடு தவிக்கும் தமிழகத்தின் உணர்வு மத்திய அரசுக்கு தெரியவில்லையா?
நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். அந்த நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு தாமதப்படுத்துவதால் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.