தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய், கடந்தாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அவருக்கு, பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். புதிதாக அரசியல் கட்சியை தொடங்கிய விஜய்யின், அடுத்தக்கட்ட நகர்வு எப்படியாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநில மாநாட்டை நடத்திக் காட்டினார்.
இந்த மாநாட்டில், தனது கட்சியின் கொள்கைகள் அறிவித்ததோடு, விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்து பேசி இருந்தார். கொள்கை எதிரி மத்தியில் ஆளும் பா.ஜ.க என்றும், அரசியல் எதிரி திமுக அரசும் என்றும் அறிவித்து இரண்டு கட்சியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அவருடைய பேச்சு, தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. அவரது பேச்சுக்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னர், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பல கட்டமாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த சூழ்நிலையில், முன்னாள் விசிக துணை பொதுச் செயலாளரும், தற்போதைய தவெக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனா எழுதிய, ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவர் அதை தவிர்த்தார். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஆதவ் அர்ஜூனாவும், விஜய்யும் பேசியிருந்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைவதாக தகவல் பரவியது. ஆனால், திருமாவளன் அதற்கு மறுப்பு தெரிவித்து தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக கூறினார். ஒரு பக்கம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால் விஜய், அது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் கடந்து போய் கொண்டிருக்கிறார். அதன் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து நிர்வாகிகளைச் சந்தித்து, சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சி.டி. நிர்மல் குமாருக்கும், விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
விஜய்யின் அரசியல் நகர்வுக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் வந்தாலும், அதே நேரத்தில் விமர்சனங்களும் வந்தவண்ணமே உள்ளன. வெறும், எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களும் கண்டனங்களும் தெரிவித்து வரும் விஜய்யை, ட்விட்டர் அரசியல்வாதி என்றும் விமர்சித்து வருகின்றனர். அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், இதுவரை ஒரு முறை கூட செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசவில்லை என்ற விமர்சனமும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை நிறைவு செய்து இன்றோடு (02-02-25) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் இன்று கட்சி கொடியேற்ற உள்ளார். அதோடு, தவெகவின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளை இன்று திறந்து வைக்கிறார். அதன் பின்னர், நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.