பட்டியலின பெண்ணின் சடலம் கால்வாயில் ஆடையின்றி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் காணவில்லை என சில தினங்களுக்கு இவரது குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை கிராமத்தில் இருந்து 500 மீ தொலைவில் ஒரு சிறிய கால்வாயில், அந்த பெண் ஆடையின்றி சடலமாக கிடந்ததை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். பெண்ணின் கண்கள் இல்லாமலும், கால்கள் கட்டப்பட்டு உடலில் பல ஆழமான வெட்டுக் காயங்களும் இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர், உடலில் போர்வை போர்த்தி கொண்டு கிராமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், காணாமல் போன புகாருக்கு பிறகு, போலீசார் தீவிரமாக தேடவில்லை என்றும் காவல்துறை செயல்படவில்லை என்றும் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.