கோப்புப்படம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்ட வனச்சரகங்கள் உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி என வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்து அங்கு வரும் வாகனங்களை குறிப்பாக லாரிகளை தடுத்து நிறுத்தி கரும்பு கட்டுகள், மக்காச்சோளத்தை சாப்பிட்டு வருவது தொடர் கதை ஆக்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே கர்நாடகாவில் இருந்து மக்காச்சோள தட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்த ஒற்றை யானை அந்த லாரியை வழிமறித்து லாரியில் இருந்த தார்பாயை சேதம் செய்து அதில் இருந்த மக்காச்சோள பயிர்களை சாலையில் கொட்டி சாப்பிட்டது. இதனால் வாகனங்கள் சாலையின் இருபுறம் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் அந்த ஒற்றை யானை சாலையின் நடுவே நின்று கொண்டு மக்காச்சோள பயிர்களை ருசித்து சாப்பிட்டது. அதன் பின்னர் மீண்டும் அந்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது.