Skip to main content

'வரி என்ற பெயரில் பல லட்சம் கோடி சுருட்டல்'- பட்ஜெட் குறித்து தவாக வேல்முருகன் கருத்து

Published on 01/02/2025 | Edited on 01/02/2025
 Tvk Velmurugan's comment on the budget 'swindling several lakhs of crores in the name of tax'

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-25) தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். இதையடுத்து, இரண்டாம் நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம், பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டை, இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் திட்டம் நீட்டிப்பு,  5 ஆண்டுகளில் 5 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்க புதிய திட்டம் என்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென தனி அறிவிப்பும் எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், சுமார்  26 கோடி விவசாயத் தொழிலாளர்கள் உள்ள நிலையில், அத்திட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் இன்றி ஒன்றிய அரசு கடந்து சென்றுள்ளது.

அதவாது, 2024-–2025ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு  உறுதித் திட்டத்திற்கு, ரூ.86 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பும், ஊதியமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், 2025–2026ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் கோரிக்கை விடுத்த நிலையில், அது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை என்பது 26 கோடி விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதன் மூலம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு  உறுதித் திட்டத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டவே ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.

nn

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டால், பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க முடியும் என்ற பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனையை, நிதிநிலை அறிக்கையில் கருத்தில் கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

உயர்நீதிமன்றங்களில் 61 லட்சம் வழக்குகளும், விசாரணை நீதிமன்றங்களில் 4.62 கோடி வழக்குகளும் நிலுவையில் இருக்கும் நிலையில், உயர்நீதிமன்றங்களில் 1,114 நீதிபதி பணியிடங்களில் 332 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. இந்திய ஒன்றியத்திற்கு காலநிலை மாற்றம் பெரும் சவாலாக விளங்கி வரும் நிலையில், அச்சவாலை எதிர்க்கொள்வதற்கோ, சுற்றுச்சூழலின் பாதுகாப்பு கருதி, நாசக்கார திட்டங்களை ஒழித்துக் கட்டுவதற்கோ எந்த அறிவிப்பும் இல்லை.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி, காப்பீட்டு துறையில் நூறு சதவீதம் அந்நிய முதலீடு செய்ய அனுமதிப்பது சாதாரண மக்கள் சேமிப்பை பாதிக்கும். குறிப்பாக, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், இரட்டை வழி ரயில்பாதை திட்டம், ரயில் பாதை மின்மயமாக்கல் போன்ற தமிழ்நாட்டின் திட்டங்களுக்கும், இயற்கை பேரிடர் கால நிவாரணம் மற்றும் மறுவாழ்வு, புனரமைப்பு போன்ற இன்றியமையாத் தேவைகளுக்கும்  போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

தமிழ்நாட்டில் வரி என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்துச் செல்லும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கும், வளர்ச்சித்திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது கண்டனக்குரியது. அதானி, அம்பானி போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு வழக்கம் போல் ஆதரவுக் கரம் நீட்டியுள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாதது ஓரவஞ்சனையே! முக்கியமாக, பீகார் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை என்று கூறுவதை விட, பீகார் மாநிலத்திற்காக ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையே எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்