திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே திண்டுக்கல் தொகுதியில் களமிறங்கிய மன்சூர் அலிகான் தினசரி தொகுதிக்கு உட்பட்ட நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை சென்று வாக்காள மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார்.
அதன்பின் வேட்பாளராக மன்சூர் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தபின் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது கூட, திண்டுக்கல் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அதை அமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்று கூறினார். அதைத் தொடர்ந்து தினசரி பிரச்சாரத்திற்கு போவதற்கு முன் தனது மகனை கூட்டிக்கிட்டு திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்பட சில நகரங்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று டீக்கடையில் டீ வாங்கி குடித்தவாறே அங்கு வரும் வாக்காள மக்களிடம் ஓட்டு கேட்பதும், டீ கடையில் வடை, பஜ்ஜி போடுபவர்களிடம் நானே போட்டுத் தருகிறேன் என்று பஜ்ஜி, வடை போட்டும் வாக்காள மக்களை கவர் செய்வதுடன் மட்டும் அல்லாமல் கறிக்கடை, பால் வியாபாரி, ஜவுளிக்கடை, மளிகை கடை காய்கறி கடைகளுக்கெல்லாம் சென்று பிட் நோட்டீசை கொடுத்து சீமானின் சின்னமான கரும்பு விவசாய சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு வருகிறார்.
அதுபோல் அதிகாலையில் எழுந்து துப்புரவு பணியாளர்களிடம் சென்று வாக்கு கேட்டவாறே தெருவில் கிடக்கும் குப்பைகளை கூட தானே அள்ளிப்போட்டு துப்புரவு பணிகளையும் செய்து பொதுமக்களையும் கவர் செய்யும் அளவிற்கு தேர்தல் களத்தில் தனிமையில் சென்று சமூகப்பணி செய்வதின் மூலமும் வாக்காள மக்களின் மனதிலும் இடம் பிடித்து வருகிறார்.
இப்படி தேர்தல் களத்தில் குதித்துள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மன்சூர் அலிகானிடம் கேட்டபோது... நான் 1999ல் பெரியகுளம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் வரை பெற்றேன். பிறகு பத்து வருடங்கள் கழித்து 2009-ல் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நான் திரைப்படத்தில் சம்பாதித்து வைத்திருந்த பணங்களை எல்லாம் இழந்தேன். தற்போது பத்து வருடங்களுக்கு பிறகு 2019ல் என்னை நானாக இணைத்துக் கொண்ட சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கரும்பு விவசாய சின்னத்தில் போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சி ஏனைய கட்சிகளை போன்ற அரசியல் கட்சி அல்ல. தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் நலனை முன்னேற்றிட வந்த புரட்சியியல் கட்சி நானும் ஒரு நடிகனாக அல்ல. ஒரு அரசியல்வாதியாக அல்ல. மக்களில் ஒருவனாக இருக்கிறேன்.
1991லேயே பாட்டாளி மக்கள் கட்சியிலேயே சேர்ந்து மூன்று வருடங்கள் பணியாற்றினேன். அதன்பிறகு நானாக விலகிவிட்டேன். அதன்பிறகு அ.தி.மு.க.விலும் சேர்ந்து விலகிவிட்டேன். 1996ல் போதிய விளையாட்டுத்திடல்கள் சென்னையில் இல்லை. ஒலிம்பிக்கில் இந்தியா தகரம் கூட வாங்கவில்லை. அதனால் கவர்னர் மாளிகைக்கு 680 ஏக்கர் நிலப்பரப்பு எதற்கு? ஒலிம்பிக் பயிற்சிக்காக 10நீச்சல் குளங்கள், 10 விளையாட்டுத்திடல்களை கட்டிக் கொடுங்கள் என்று கவர்னர் மாளிகை முன் கிரிக்கெட் விளையாட போனேன். கடைசியில் கைதாகி 50 ரசிகர்களுடன் 15 நாட்கள் வேலூர் சிறையில் இருந்தேன்.
எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தமாக இருக்கிறது. ஈழ விடுதலையை ஆதரித்து 1983ல் லட்சம் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்ட நாளில் மனித சங்கிலி அமைத்து போராடியது முதல் காவேரி பிரச்சனை, மீனவர்கள் தாக்கப்பட்ட பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, ஸ்டெர்லைட் மீத்தேன் இப்படி பல போராட்டங்கள் ஜல்லிகட்டு, எட்டுவழிச்சாலை எதிர்த்து செந்தமிழ் சீமானை கைது செய்ததை எதிர்த்தும் போராடி சிறை சென்றேன். இதை நான் பெருமையாக சொல்லவில்லை. இந்த மண்ணின் விடுதலைக்காகவும், சமூக விடுதலக்காகவும் போராடிய ஆயிரக்கணக்கான தியாகிகளின் 10 வருடங்களுக்கு மேல் தமது இளமை காலங்களை சிறையில் கழித்த ஈ.வெ.ரா.பெரியார் வ.உ.சிதம்பரானார் மேலும் 28 வருடங்களாக அபாண்டமாக சிறையில் வாழும் 7 தமிழர்களின் கால் தூசிக்கு கூட ஈடாகாது என் பங்களிப்பு.
நமது திண்டுக்கல் தொகுதியில் மண்ணின் மைந்தன் நான். எனது தந்தையார் மீசைக்காரர் அப்துல்சலாம் ராவுத்தர். நான் பிறந்த ஊர் பழனிக்கு அருகே உள்ள ஜவ்வாதுப்பட்டி, எனது தாயார் சவுரம்மாள் பிறந்த ஊர் இடையகோட்டை பள்ளபட்டியில் 10ம் வகுப்பு வரை வளர்ந்தேன். நாற்பது வருடமாக பிழைப்பிற்காக சென்னையில் வாழ்ந்துவிட்டேன். இனி இறைவன் நாடினால் இத்தொகுதியிலேயே இருந்து உங்களோடு தோழ் நின்று ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக நிச்சயமாக அரும்பாடுபட்டு மிக கடுமையாக இருந்து போராடி உரிமைகளை மீட்பேன்.
வாக்காள மக்களின் உண்மையான வேண்டுகோள்களை கடிதம் மூலம் எழுதி எனக்கு நீட்டட்டும் அதில் நான் கையெழுத்திடுகிறேன். தவறும் பட்சத்தில் மக்களை என் செலவிலேயே டெல்லிக்கு அழைத்து சென்று போராடி கூட நீதியை பெற்றுத் தருவேன். முப்பது ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து ஆயிரம் தலைமுறைக்கு சொத்து சேர்த்து இன்னும் பத்தாது என்று மக்களிடம் ஓட்டுக் கேட்டு வருபவர்கள் வேண்டுமா? சீரழித்து விட்ட தமிழகத்தை தற்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுத்து மக்களின் அடிமட்ட வேலைக்காரனாக உழைக்க காத்திருக்கும் எனக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்!