டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை ஒட்டி கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பிரச்சாரத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த இரு சக்கர வாகனப் பேரணி 234 தொகுதிகளுக்கும் சென்று திமுகவின் கொள்கைகள் அரசின் செயல்பாடுகள், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களைக் கடந்து சனிக்கிழமை மாலை கடலூர் மாநகருக்கு இருசக்கர வாகன பிரச்சார பேரணி வருகை தந்தது.
இதனை செம்மண்டலம் பகுதியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆயிரம் இளைஞர்களுடன் தலைமை தாங்கி வரவேற்றார். இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தண்ணீர் பாட்டில், பிஸ்கட், பழச்சாறு, ஸ்வீட் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவர் பிரவீன் ஐயப்பன், மாமன்ற உறுப்பினர் பிரகாஷ், கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஆதி பெருமாள், திமுக நிர்வாகிகள் ரவீந்திரன் ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.