Skip to main content

திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல்!

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

DMK women panchayat leader threatened

 

முன்னாள் காவல்துறை அதிகாரியும் அவரது மனைவியும் சேர்ந்துகொண்டு திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி. இவர் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவராகவும், திமுகவில் மாவட்ட மகளிரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். சிவசங்கரி தன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யக்கூடியவர் என்றும், எப்போதும் பொதுமக்களை அணுகி தங்களுடைய குறைகளை கேட்டறிந்து சரி செய்யக்கூடியவர் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

இந்நிலையில், பஞ்சாயத்து துணைத்தலைவராக இருப்பவர் மரகதம். அவரது கணவரான முருகன் என்பவர் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர். இவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் சில அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தன் கணவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதால் அவரோடு சேர்ந்து அதிகாரிகளை மிரட்டி வரும் மரகதம் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள கோப்புகளை சரிபார்த்து வந்துள்ளனர்.

 

அதுமட்டுமின்றி, அங்குள்ள சில முக்கியமான கோப்புகளையும் எடுத்துச் செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில், பஞ்சாயத்து தலைவரான சிவசங்கரி துணைத்தலைவர் மரகதம் மற்றும் அவரது கணவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், அதற்கெல்லாம் மசியாத இவர்கள், சிவசங்கரியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி மரகதம் - முருகன் தம்பதி மீது சங்கரன்கோவில் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள சிசிவிடி காட்சிகளை ஆய்வு செய்ததில் மரகதமும் முருகனும் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த முருகனும் தலைமறைவாகியுள்ளார்.

 

இதையடுத்து, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர். அதே சமயம், திமுக பெண் பஞ்சாயத்து தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்