புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மன் பதவியைக் கைப்பற்றி விட அதிமுக செய்த முயற்சிகள் பலனளிக்காமல் திமுகவை சேர்ந்த மாலா கைப்பற்றினார். சேர்மன் பதவியை ஏற்றது முதலே ஒரு கூட்டம் கூட நடத்த முடியவில்லை. தன்னுடன் பயணிக்கும் திமுக கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் வரை சேர்மன் மாலா புகார் கொடுத்தார். புகாருக்கும் பிறகும் அதே நிலை நீடித்தது.
அதன் பிறகு அமைச்சர் நேரு தலையிட்டு சமாதானம் செய்தும் கூட அதேநிலை தான் நீடித்தது. சில மாதங்கள் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அப்போதைய பெண் அதிகாரி கவுன்சிலர்களிடம் பேசி கூட்டம் நடந்ததாகப் பதிவு செய்தார். மற்றொரு பக்கம் சேர்மன் தன்னிச்சையாகச் செயல்படுகிறார். ஒன்றியத்தில் உள்ள அத்தனை பணிகளையும் அவரே எடுக்கிறார். மற்ற கவுன்சிலர்களுக்கு பணிகள் கொடுப்பதில்லை. கட்சி நிர்வாகிகள் சொன்னாலும் கேட்கவில்லை அதனால் யாரும் ஒத்துழைக்கவில்லை என்கின்றனர்.
இந்நிலையில்தான் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் பணிகள் முடங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியரை பார்க்க சேர்மன் மாலா சென்ற நிலையில், ஆட்சியரை சந்திக்கும் முன்பே திடீரென மயங்கி விழ, கூட வந்தவர்கள் தூக்கி தண்ணீர் தெளித்தபோது பல மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாக கூறியுள்ளார். உடனே ஒரு காரில் ஏற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலமுனையாக உள்ளதால் இப்படியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.