ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் லோகிராஜனும் திமுக சார்பில் மகாராஜனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயக்குமாரும் போட்டி போடுகிறார்கள். இந்த மூவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில்தான் ஆளுங்கட்சியை சேர்ந்த ஓபிஎஸ் தரப்பினர் கடந்த இரண்டு நாட்களாக ஆண்டிபட்டி தொகுதியில் தலைக்கு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பட்டுவாடா பண்ணி வருகிறார்கள். அதுபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க தயாராகி பணத்தையும் கவரில் போட்டு பி.ஆர்.பி.காம்ளக்ஸில் வைத்து இருந்தனர்.
இந்த விஷயம் ஓபிஎஸ் காதுக்கு எட்டவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த
டிடிவி அணியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் நாம் தோற்று விடுவோம் என்று பயந்து போன ஓபிஎஸ் உடனடியாக இத்தகவலை தனக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு தகவல் சொன்னார். அதன் அடிப்படையில் டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் இன்ஸ்பெக்டர் பாலகுரு உள்பட சில போலீசார் மட்டுமே டிடிவி அணியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக ஆண்டிபட்டி நகரில் உள்ள பயர் சர்வீசுக்கு எதிரே உள்ள பி.ஆர்.பி . காம்ப்ளக்ஸ் -ல் திடீர் என போலீசார் சோதனையில் இறங்கியதை கண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் திடீரென பி.ஆர்.பி.காம்பளக்ஸ் மாடிக்கு படையெடுத்து இங்கு சோதனை செய்யகூடாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்படி இருந்தும் போலீசார் சோதனை செய்ய முயற்சிக்கவே டிடிவி அணியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது அங்கிருந்த டிடிவி அணியினர் பலர் அந்த காம்ப்ளக்ஸ் ரூமுக்குள் புகுந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். அதைக்கண்டு டென்ஷனான காக்கிகள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். அப்படி இருந்தும் டிடிவி அணியினர் மறைத்து வைத்திருந்த பெரும்பாலான பணப் பைகளை கொண்டு சென்றுவிட்டனர். இருந்தாலும் கொஞ்சம் பணம் காக்கிகள் கையில் சிக்கியது. அதோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட துணைச் செயலாளர் உள்பட 4 பேரை டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் இன்ஸ்பெக்டர் பாலகுரு கைது செய்துள்ளனர். இதனால் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.