மத்திய அரசு கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதைக் கண்டித்து, திருச்சி மாவட்ட மத்திய மற்றும் வடக்கு தி.மு.க., தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 15 நாட்களுக்குள் சுமார் 100 ரூபாய் வரை கேஸ் சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. தற்போதைய கரோனா காலத்தில் வருமானம் இன்றி, தவிக்கும் பல குடும்பங்கள் இந்த விலை உயர்வைச் சமாளிக்க முடியாமல் அடுப்பிற்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வானது, மாத குடும்பச் செலவில், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக, பெண்கள் தெரிவித்துள்ளனர். எனவே, கேஸ் சிலிண்டர் விலையை உடனடியாகக் குறைத்து, குடும்ப வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று, 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மத்திய அரசு, கேஸ் விலை உயர்வை ரத்து செய்து, மலிவான விலையில் கேஸ் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்டம் சார்பில் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு தி.மு.க மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.