மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செவ்வாய்க்கிழமை(23.7.2024) நாடாளுமன்றத்தில் 2025 -2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும், சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக படுதோல்வியைச் சந்தித்ததால் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல், பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று குற்றம்சாட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். பட்ஜெட்டிற்கு முன்பாகவே, நிலுவையில் உள்ள வெள்ள நிவாரண நிதி மற்றும் மெட்ரோ பணிகளுக்காக நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அவற்றிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டிற்கு எதிராக இன்று(27.7.2024) சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திமுக, எம்.எல்.ஏ, எம்.பிக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் சென்னை ஆளுநர் மாளிகை அருகே தென்சென்னையில் எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் தலைமையிலும், மத்திய சென்னையில் எம்.பி தயாநிதிமாறன் தலைமையிலும் திமுக சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று சைதாப்பேட்டையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.