மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி குறிப்பிட்ட காலக்கெடுவில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததை எதிர்த்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் பல்வேறு இடங்களில் சாலைமறியல் செய்ய திமுகவினர் திட்டமிட்டிருந்தனர். இதை தொடர்ந்து திமுகவினர் இரண்டாவது நாளாக இன்று காலை சுமார் 10 மணியளவில் சைதாப்பேட்டையில் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
சைதாபேட்டை அண்ணாசாலையின் இருபுறமும் சுமார் 200க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டை காவல்துறையினர் திமுகவினரிடம் சாலைமறியல் விளக்கிக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டக்கார்கள் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சாலையின் இருபுறமும் நடந்த இந்த சாலை மறியலால் கிண்டி வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் பூந்தமல்லி சாலையிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
படங்கள்: அசோக்குமார், குமரேஷ்