Skip to main content

வெளிநாட்டு குடிதண்ணீர் விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்க வேண்டும்! திண்டுக்கல் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை!!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அதனருகே உள்ள அக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் அருள்மிகு சடையாண்டி கோவில் உள்ளது. இக்கோவில் அருகே பன்னாட்டு நிறுவனத்தின் குடிதண்ணீர் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து அவர்கள் சுத்தம் செய்து ஒரு லிட்டர் இரண்டு லிட்டர் வாட்டர் கேன்களில் தண்ணீர் நிரப்பி அவற்றை லாரிகளின் மூலம் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந் நிறுவனம் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மட்டம் மைனஸ் அளவிற்கு சென்றதில்லை. இந்நிறுவனம் ஆரம்பித்த பின்பு வருடந்தோறும் கோடைக்காலங்களில் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தின் குடிதண்ணீர் மட்டம் மைனஸ் ஒன்று முதல் ஐந்து அடி ஆழம் வரை சென்றுவிடுகிறது. 
                                                                                                                                                                                                                                             

w

                                                                                                                                                                                                          ஆரம்பத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த பாலபாரதிஎம்.எல்.ஏ. உட்பட பல அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி குடிதண்ணீர் நிலையம் அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் அக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுமதி வழங்கியதால் இந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதைபார்த்த பின்பு ஆத்தூரை சுற்றி புற்றீசல் போல் குடிதண்ணீரை கேன்கள் மூலம் பிடித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதிகரித்து விட்டது.

 

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி மற்றும் சித்தையன்கோட்டை பேரூராட்சி இதை தவிர அக்கரைப்பட்டி, ஆத்தூர், அம்பாத்துரை, சீவல்சரகு, ஆகிய ஊராட்சிகளுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்ய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குடிதண்ணீரை கேன்கள் மூலம் நிரப்பி விற்பனை செய்யும் நிலையம் அமைக்கப்பட்டவுடன் ஊராட்சிகளுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் கிராமங்களில் குடிதண்ணீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டு வருகிறது. இதுபோல ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்திலும் தண்ணீர் மட்டம் மைனஸ் ஐந்து அடிக்கு சென்று விட்டது.  

 

w


திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்தூர் மற்றும் அக்கரைப்பட்டி ஊராட்சிகளில் செயல்படும் குடிதண்ணீர் விற்பனை நிலையங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. 


இதுகுறித்து அக்கரைப்பட்டி மற்றும் மல்லையாபுரத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்... ஊராட்சிகளுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யும் ஆழ்துளை கிணறு அருகே இந்த குடிதண்ணீர் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இதற்கு அனுமதி வழங்கியது முறைகேடானது. அப்போது அனுமதி வழங்கிய அக்கரைப்பட்டி ஊராட்சி செயலர் மீதும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 இந்த நிறுவனம் செயல்படுவதை பார்த்து ஆத்தூர் ஊராட்சி பகுதிகளில் குடிதண்ணீர் விற்பனை செய்யும் நிலையங்கள் அதிகரித்து விட்டது. எனவே கோடை காலம் முடியும் வரையிலும் குறிப்பாக குடிதண்ணீர் பஞ்சம் தீரும் வரை ஆத்தூர் மற்றும் அக்கரைப்பட்டி ஊராட்சி பகுதிகளில் செயல்படும் குடிதண்ணீரை பிடித்து விற்பனை செய்யும் நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக அந்த நிறுவனங்களை மூட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். கிராம மக்களுக்கு குடிதண்ணீர் பாதிக்கப்படும் என்று தெரிந்தும், குடிதண்ணீர் விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கிய அக்கரைப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் மீதும், முன்னாள் ஊராட்சி செயலாளர் மணவாளன் மீதும் கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

 

w

இதுதவிர 5 வருடங்களாக குடிதண்ணீர் விற்பனை நிலையம் செயல்படுவதற்கு அனுமதி கொடுக்காமல்  சுதந்திரமாக செயல்பட காரணமாக இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் கிராம மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் காசுக்கு தண்ணீர் விற்கும் நிலையத்தை எப்படி செயல்பட அனுமதிக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர். இதுபோல முன்னாள் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க பகுதியில் தனியார் தண்ணீர் விற்பனை செய்யும் நிலையங்களை தடை செய்யாவிட்டால் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் ஜீரோ நீர்த்தேக்கமாக மாறிவிடும். மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் இனிமேலாவது நடவடிக்கை எடுப்பாரா?

சார்ந்த செய்திகள்