
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி தொண்டர்கள் மத்தியில் ஏக குஷியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் பட்டாசுகள், இனிப்புகளை வாங்கி வைத்து கொண்டாட தயாராகி வருகின்றனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், கசவனம்பட்டி கிராமத்தில் ஒரு படிமேலே சென்ற திமுக கட்சியினர் ஆட்டுக்கிடா குட்டிகளை வாங்கி ஊருக்கே பிரியாணி போடும் நோக்கில் தயாராகி வருகின்றனர்.
இதேபோல் வத்தலக்குண்டு ஒன்றிய கவுன்சிலர் விராலிப்பட்டி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று இனிப்பு கொடுப்பதற்கு இரண்டாயிரம் லட்டுகளை பாக்கெட் போட்டு வருகிறார். அதுபோல் கொடைக்கானலில் திமுக தொண்டர்கள் வெடியுடன் போஸ் கொடுக்கும் போட்டோக்களை முகநூலில் பதிவிட்டு வருகின்றனர். கட்சித் தலைமை வெற்றியை கொண்டாட வேண்டாம் என தடை போட்டாலும் தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாட இப்பொழுதே தயாராகி வருகிறார்கள்.