Skip to main content

திமுக தொடர்ந்த மனு தள்ளுபடி..! ம.நீ.ம. தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு..! 

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

DMK petition dismisses.. MNM petition Postponement of trial

 

கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு வாபஸ் பெற்றுள்ளார்.

 

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம சபை கூட்டத்தை ஆண்டுக்கு நான்கு முறை, அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். ஆனால், கரோனா ஊரடங்கு விதிகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி நடத்த வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

 

இதை எதிர்த்து, கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிடக் கோரி திமுக தரப்பில் முதன்மைச் செயலாளர் கே.என். நேருவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச் செயலாளர் ஏ.ஜி. மவுரியாவும் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். 

 

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது அப்போதைய தமிழ்நாடு அரசு தரப்பில், கரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவது சரியாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது.

 

இந்த வழக்குகள் இன்று (15.06.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கே.என். நேரு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை எனவும், வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கே.என். நேரு தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

அதேசமயம் மக்கள் நீதி மய்யம் மௌரியா தொடர்ந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்