தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பாக, டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று (30/06/2021) நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டி.ஆர்.பாலு எம்.பி., "பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவும் போது தமிழக பா.ஜ.க. தலைவர்கள் ஏன் ஒன்றிய அரசை வலியுறுத்தவில்லை. தமிழகத்தின் நலன் மீது பா.ஜ.க. தலைவர்கள் யாருக்கும் அக்கறை இல்லை. 90% தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும் 10% தடுப்பூசிகளைத் தனியாருக்கும் வழங்க வேண்டும். தமிழகத்துக்கு 12 கோடி டோஸ் தடுப்பூசி கேட்டுள்ளோம். ஜூலை மாதத்துக்கு 50 லட்சம் கரோனா தடுப்பூசித் தருவதாகக் கூறியுள்ளனர். எந்த தடுப்பூசி வேண்டுமென்று குறிப்பிட்டுக் கேட்கவில்லை. தடுப்பூசிக்காக மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசின் கதவைத் தட்ட வேண்டியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.