Skip to main content

நல்லவன் கெட்டவன் பார்த்து கடிப்பதில்லை! -வீறிட வைக்கும் வெறிநாய்கள்!  

Published on 03/07/2018 | Edited on 03/07/2018
sivakasi

 

“நல்லவன், கெட்டவன்ங்கிறது வெறிபிடிச்ச நாய்க்குத் தெரியுமா?” என்று  கடிபட்டவர்கள் சிவகாசியில் அலறுகின்றனர்.  ஒருவரோ, இருவரோ அல்ல, ஒரு நாளில், ஒரே நாயிடம் 38 பேர் கடிபட்டிருக்கின்றனர்.  பள்ளி மாணவியையும் அந்த வெறிநாய் விட்டு வைக்கவில்லை. செக்யூரிட்டி சிங்கராஜை முகம் வரைக்கும் தாவி குதறியிருக்கிறது. கை, கால் என கண்ட இடங்களிலும் கடிபட்ட மக்கள்  சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

 

சிவகாசி பேருந்து நிலையம் மற்றும் பாரதிநகர் போன்ற பகுதிகளிலும், திருத்தங்கல்லிலும்  வெறிநாய்கள் திரிகின்றன. அதனால், வீட்டைவிட்டு வெளிவருவதற்கே மக்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகள், வெறிநாய்களிடம் கடிபடாமல் வீடு திரும்ப வேண்டும் என்பது பெற்றோரின் பெரும் கவலையாக இருக்கிறது.   

 

சுத்தம், சுகாதாரம் என்று  போர்டு வைத்தும், நோட்டீஸ் வினியோகித்தும்  மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருவதாக தம்பட்டம்  அடிக்கும் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி, வெறிநாய்கள் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனாலேயே, நாய்க்கடித் தொல்லைகளுக்கு மக்கள் ஆளாகிவருகின்றனர். நாய்கள் காப்பகம் அமைத்துத் தரவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை, செவிடன் காதில் ஊதிய சங்காகவே இதுநாள் வரையிலும் இருந்து வருகிறது. 

 

நாய்க்கு எப்படி வெறிபிடித்தது? ஏன் கடித்தது? என்று சிவகாசி காவல்துறையினர் புலனாய்வு செய்தனர்.    குப்பை போடும் இடத்தில் நாய் ஒன்று குட்டிபோட முயற்சித்தபோது, துப்புரவுப் பணியாளர்கள் விரட்டியதாகவும், அதனாலேயே வெறிபிடித்து பலரையும் கடித்ததாகவும் கண்டறிந்திருக்கின்றனர். மக்களைக் காப்பதற்காக,  வெறிபிடித்து அலையும் நாய்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனாலும், வெறிநாய் விஷயத்தில் உள்ளாட்சி அமைப்புக்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே பொதுமக்களின் புகாராக இருக்கிறது.  

 

வழக்கமாக, நாய்கள் ஜாக்கிரதை என்று பங்களா வீடுகளில்தான் வெளிக்கதவில்  போர்டு ஒன்றைத் தொங்கவிட்டிருப்பார்கள்.  இன்றோ,  வெறி நாய்கள் ஜாக்கிரதை என்று ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களை எச்சரிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. 
‘எந்தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுப்பா..’ என்று சிரிப்பதற்கு இதுஒன்றும் ஜனகராஜ் சினிமா காமெடி அல்ல! வெகு சீரியஸான இந்த வெறி நாய்க்கடி விவகாரத்தில், அரசுத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 

சார்ந்த செய்திகள்