தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மஹாராஷ்ட்ரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சமூக இடைவெளியையும், முகக் கவசத்தையும் தவிர்த்ததன் காரணமாக, கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், எனவே பிரச்சாரத்தின்போதும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரச்சாரம் செய்து வரும் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு கரோனா மருத்துவ பரிசோதனைச் செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும், இன்று (03.04.2021) மதியம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்டக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கரோனா உறுதியான நிலையில், ஒரு சில வேட்பாளர்கள் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தனர்; மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.