தமிழகம் முழுவதும் இந்திய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி என அறிவித்தது மாநில பாஜக தலைமை. அதன்படி பிப்ரவரி 28ந்தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் பாஜக பேரணி நடத்தியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 28ந்தேதி மாலை 5 மணிக்கு, மாவட்ட கூட்டுறவு பால் குளிரூட்டும் நிலையம் முன்பிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பாஜக மாநில ஊடக பிரிவு செயலாளரான பிரசாந்த் முக்கிய பிரமுகராக கலந்துக்கொண்டார்.
இந்த ஊர்வலத்துக்கு காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு எழுதி தந்து அனுமதி கேட்ட பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம், அதிகாரிகளிடம் மாவட்டம் முழுவதிலும்மிருந்து 2 ஆயிரம் பேர் வந்து கலந்துக்கொள்வார்கள் எனக்கூறியிருந்தார். மத்தியில் ஆளும்கட்சி, மாநிலத்தில் கூட்டணி கட்சியான அதிமுக ஆட்சியில் இருப்பதால் பாஜக நடத்தும் பேரணிக்கு பாஜக தலைவர் சொன்னதைப்போலவே கூட்டம் வரும் என முடிவெடுத்தனர் காவல்துறை அதிகாரிகள்.
திருவண்ணாமலை – வேலூர் சாலையில் வாகன போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. 3 மணிக்கெல்லாம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான சிபிசக்கரவர்த்தி தலைமையில் 500 போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். 4ம ணிவரை மாவட்டம் முழுவதிலும்மிருந்து 200 பாஜக தொண்டர்கள் தான் பேரணிக்கு என வந்துயிருந்தனர். திடீரென சில குட்டியானைகளில் பெண்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டார்கள். 400 பேர் அளவுக்கு கூட்டம் சேர்ந்தது. இதில் திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் காவி உடை தரித்து அமர்ந்துயிருக்கும் யாசகர்கள் 25 பேரை ஊர்வலத்தில் அழைத்து வந்து நிறுத்தினர் உள்ளுர் பாஜகவினர்.
மக்களை திசை திருப்பும் திமுக ஒழிக, நாட்டுக்கு நல்லது செய்யும் மோடி வாழ்க என குரல் எழுப்பியபடி 500 மீட்டர் தூரத்துக்கு பேரணி நடத்தினர். மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் வாயிலில் சி.ஏ.ஏ ஆதரவு கூட்டம் நடத்தினர். அங்கு பேரணி திமுக கூட்டணியை எதிர்க்கும் பேரணி என்றார்கள் பேசிய அனைவரும். அதன்பின்னர் பாஜக நிர்வாகிகள் 5 பேர், மாவட்ட ஆட்சியர் அறைக்கு சென்று இந்திய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து மனு தந்துவிட்டு வந்தனர். 400 பேருக்கு, 500 போலீஸ் பாதுகாப்பா என நொந்துப்போனார்கள் பாதுகாப்புக்கு வந்து சுட்டெரிக்கும் வெய்யிலில் 4 மணி நேரம் டூட்டி பார்த்த இளம் காக்கிகள்.